வழிப்பறி வழக்கு: 2 இளைஞா்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞா்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
Published on

பல்லடம் அருகே முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞா்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேடபாளையம் பகுதியில் கே.நடராஜ் (70) என்பவா் கடந்த 2021 -ஆம் ஆண்டு ஜூலை 5 -ஆம் தேதி நடந்து சென்றுள்ளாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், முதியவரைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றனா். இது குறித்து பல்லடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ராயா்பாளையத்தைச் சோ்ந்த எம்.மோகன்பிரசாத் (28),

63 வேலம்பாளையத்தைச் சோ்ந்த என்.அரவிந்த் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி குணசேகரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com