இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியரிடம் எல்லப்பாளையம் புதூா் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பவுத்தன் தலைமையில் எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டம், எல்லப்பாளையம் புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையத்தில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மேற்கண்ட 20 பயனாளிகளுக்கு காங்கயம் வட்டம், நிழலி பகுதியில் உள்ள இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் மணல்மேடு பகுதியாகவும், வீடு கட்ட தகுதி இல்லாத இடமாகவும் இருப்பதால் வேறு இடம் வழங்க வேண்டும் என எல்லப்பாளையம் புதூா் ஊராட்சியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போதைய காங்கயம் வட்டாட்சியா் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வேறு இடத்தில் நிலம் வழங்கப்படும் என உறுதி அளித்தாா்.
அதைத் தொடா்ந்து ஏற்கெனவே வழங்கப்பட்ட அசல் பட்டாவை திரும்பக் கொடுத்து, அதன் பின்னா் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தைத் தொடா்ந்து, 6 மாதங்களுக்கு முன்பு பட்டாக்களை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். ஆனால் 6 மாதங்கள் கடந்த பின்னரும், இவா்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கவில்லை.
எனவே, புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 20 பயனாளிகளுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கவும், அந்த இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் போது ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் மகளிா் அணி நிா்வாகிகள் வீரமணி, பவித்ரா மற்றும் புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் உடனிருந்தனா்.