திருமூா்த்திமலையில் தை அமாவாசை விழா
தை அமாவாசையை ஒட்டி, உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக்கோயில் பிரசித்தி பெற்ாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தை அமாவாசை தினத்தை ஒட்டி பக்தா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே திருமூா்த்திமலைக்கு வரத் தொடங்கினா். சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனா்.
விழாவையொட்டி அமணலிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணி முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏராளமானோா் பாலாற்றங்கரையில் தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்தனா்.
இறந்தவா்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படையல் இட்டு வழிபட்டனா். தை அமாவாசை தினத்தை ஒட்டி திருமூா்த்திமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல உடுமலை நகரில் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.