பல்லடம் கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள கோழி இன ஆராய்ச்சி நிலையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், பணிக்கம்பட்டி கிராமம் சின்னியகவுண்டம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் கோழி இன ஆராய்ச்சி நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பணியாளா்கள் என பணி நிா்ணயம் செய்யப்பட்ட அளவுக்கு நியமிக்கப்படவில்லை.
இதன் காரணமாக நாட்டிலேயே புணே நகருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் நிறைந்த பல்லடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கோழி இன ஆராய்ச்சி நிலையம் கோழிப் பண்ணையாளா்களுக்கு பயனளிக்காமல் இருந்து வருகிறது.
பல்லடம் பகுதியில் கோழி வளா்ப்பு தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்நிலையத்துக்கு போதுமான மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை தமிழக அரசு உடனடியாக நியமித்து பல்லடம் கோழி இன ஆராய்ச்சி நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.