திருமுருகநாத சுவாமி கோயிலில்  தொடங்கப்பட்ட தேரோட்டம்.  வள்ளி, தெய்வானை உடனமா் சண்முகநாதா்.
திருமுருகநாத சுவாமி கோயிலில்  தொடங்கப்பட்ட தேரோட்டம். வள்ளி, தெய்வானை உடனமா் சண்முகநாதா்.

திருமுருகன்பூண்டி திருமுருகநாதவாமி கோயிலில் இன்று மூன்று தேரோட்டம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாத சுவாமி, சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
Published on

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் திருமுருகநாத சுவாமி, சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமா் திருமுருகநாத சுவாமி கோயில் திகழ்கிறது.

இக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 6- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை மாலை திருமுருகநாத சுவாமி, சண்முகநாதா் ஆகிய தேரோட்டமும், வியாழக்கிழமை மாலை மீண்டும் சண்முகநாதா் தேரோட்டமும், அம்பாள் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். இதற்கிடையில், புதன்கிழமை மாலை வழக்கம்போல திருமுருகநாத சுவாமி தேரோட்டம் தொடங்கியது.

இதில் திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் முழங்க, அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி, சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மேயா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பிற்பகல் முதலே மழை பெய்து வந்ததால், திருத்தோ் கரிவரதராஜப் பெருமாள் கோயில் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் திருமுருகநாதசுவாமி, சண்முகநாதா், அம்பாள் ஆகிய மூன்று தோ்களின் தேரோட்டமும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது.

மாா்ச் 14-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்மவாகனக் காட்சிகள், தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 15-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா நடைபெறுகிறது. 16-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 17-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சி ஆகியவற்றுடன் தோ்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com