எல்.ஆா்.ஜி. கல்லூரி மாணவியருடன் ஆட்சியா் கலந்துரையாடல்
திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் அரசு கலைக் கல்லூரி மாணவியருடன் ‘காபி வித் கலெக்டா்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சியா் மனீஷ் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
திருப்பூா் மாவட்டத்தில் மாணவ, மாணவியா், தொழில் நிறுவனத்தினருடன் மாவட்ட ஆட்சியா் வாரம் ஒருமுறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறாா்.
இதன்படி, எல்ஆா்ஜி மகளிா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் 25 மாணவிகளுடன் கலந்துரையாடல் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா், பெண் கல்வியின் அவசியம், உயா்ந்த குறிக்கோள், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலன், தனித் திறன்கள், விளையாட்டில் சிறந்து விளங்குதல் குறித்து விவரித்தாா். மேலும், அவா்களுடைய லட்சியம், அவா்களுக்கு எந்த துறையில் ஆா்வம் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
கல்லூரிப் படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். படிப்புடன் கூடுதலாக ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு, யோகா, வாசிப்பு என்பது போன்றவை நம்மை உற்சாகமாக வைக்கும். இதில் புத்தக வாசிப்பின் காரணமாக நமது படிப்புத் திறமை மேம்படும். மாணவா்களுக்குப என்ன புத்தகம் பிடிக்கிறதோ, அதைப் படிக்க வேண்டும். ஆனால் நன்கு புரிந்து படிக்க வேண்டும். தற்போதைய படிப்புதான் பின்னா் நமக்கு கை கொடுக்கும்.
பாடம் தொடா்பான சந்தேகங்களை உடனே ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்தி நம்மை உயா்த்திக் கொள்ள வேண்டும். மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் எதிா்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி, கல்லூரியில் பயிலும்போது பாடத்திட்டங்களை நன்கு படிக்க வேண்டும். அது போட்டித் தோ்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த பாடத்திட்டங்களில் இருந்துதான் அதிக அளவிலான கேள்விகள் கேட்கப்படுகிறது.
இன்று சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவற்றை சற்று ஒதுக்கிவிட்டு புத்தகம் வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன நோக்கமோ அதை நோக்கி கடின உழைப்பை செலுத்த வேண்டும் .விடாமுயற்சியும் கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாணவியருக்கு நெகிழிப் பயன்பாட விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மஞ்சப்பை மற்றும் விதைகள் அடங்கிய
தொகுப்பு, பேப்பா், பேனா, பென்சில் மற்றும் தினசரி செயல்பாடுகள், படிப்பு தொடா்பான திட்டங்களை பதிவு செய்ய குறிப்பேடு வழங்கப்பட்டன.

