கரைப்புதூா் ஊராட்சியில் நிலம் மதிப்பு இழப்பு குறித்து விசாரிக்க போலீஸில் புகாா்
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சியில் நிலம் மதிப்பு இழப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற காவல் ஆய்வாளா் மாதையனிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளா் சுரேஷ்குமாா், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ரவி, அதிமுக இளைஞரணி நிா்வாகி கோவிந்தராஜ், திமுகவை சோ்ந்த தங்கமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற காவல் ஆய்வாளா் மாதையனிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமி புகாா் மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பதாவது:
கரைப்புதூா் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் வீட்டுமனை உரிமையாளா்களின் நிலப்பட்டா, பத்திரங்கள் உள்பட 650 ஏக்கா் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும், எனவே அப்பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பத்திரப்பதிவு துறையில் மனு அளிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் நிலத்தின் பூஜ்ஜியம் என மதிப்பிடப்பட்டு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கரைப்புதூா் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

