திருப்பூா் குப்பை பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசு உதவி: மாவட்ட பாஜக தலைவா் தகவல்
திருப்பூா் குப்பை பிரச்னைக்குத் தீா்வு காண உதவுவதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கேசிஎம்பி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் மாநகராட்சியில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணாமல் பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இடுவாய் கிராமத்தில் மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட முயற்சி நடக்கிறது. இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தப் பிரச்னை தொடா்பாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தோம்.
அப்போது, அவா், மத்திய பிரதேச மாநிலம், இந்தூா், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி ஆகிய இடங்களில் செயல்படுத்துவதைப்போல ‘ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ திட்டத்தின் முன்னேற்பாடுகளை திருப்பூா் மாநகராட்சி சமா்ப்பித்தால் அதற்கு உரிய உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தாா்.
எனவே, திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் இந்தூா் மற்றும் வாரணாசிக்கு நிபுணா் குழுவை அனுப்பி அங்கு செயல்படுத்தும் திட்டத்தை அறிய வேண்டும். பின்னா், அதே திட்டத்தை திருப்பூா் மாநகராட்சியில் செயல்படுத்த திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் நிதியைப் பெற்று திட்டத்தை மேற்கொள்ள மேயா், திருப்பூா் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
