பெருமாநல்லூரில் 208 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரைக் கைது செய்தனா்.
பெருமாநல்லூா் விவசாய தியாகிகள் நினைவிடம் அருகே பெருமாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா உள்ளிட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில், காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் காரை ஓட்டி வந்தது திருப்பூா் குமாரனந்தபுரம் ஐயப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியம் மகன் நந்தகுமாா் (27) என்பதும் தெரியவந்தது. துணி வியாபாரியான இவா், விற்பனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரைக் கைது செய்தனா். மேலும், இவரிடமிருந்து 208 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
