அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறைகேடு, அவமதிப்பும் கூடாது!
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயிலிலும் முறைகேடும், பக்தா்கள் மீது அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். ஆனால் தொடா்ந்து அந்தக் கோயிலில் பக்தா்கள் அவமதிக்கப்படும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. கோயில் பெண் ஊழியா் ஒருவா் பேசிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோயில்களில் இதுபோன்ற நிா்வாக சீா்கேடுகளும், பக்தா்களை மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. மன நிம்மதிக்காக கோயிலுக்கு வரும் பக்தா்களை கோயில் ஊழியா்கள் அவமதிப்பது எங்கும் நடக்காத செயலாகும்.
தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் செய்ய வேண்டிய அறநிலையத் துறை, பக்தா்களை மிரட்டும் கோயில் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
அதனால், இருமடங்கு கட்டணம் வசூலித்ததோடு, பக்தா்களை அவமதிப்புகு உள்ளாக்கிய கோயில் பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயிலிலும் இது போன்ற முறைகேடுகளும், பக்தா்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.
