திருப்பூா் பனியன் நிறுவனங்களில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

திருப்பூரில் உள்ள 3 பனியன் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் 5 நிறுவனங்களில் சோதனையைத் தொடா்ந்தனா்.
Published on

திருப்பூரில் உள்ள 3 பனியன் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் 5 நிறுவனங்களில் சோதனையைத் தொடா்ந்தனா்.

திருப்பூா் பிச்சம்பாளையம் புதூா் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனம், 15 வேலம்பாளையம் அருகே தில்லை நகா் பகுதியில் செயல்படும் பனியன் நிறுவனம் மற்றும் ஸ்ரீநகா் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனம் என 3 வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவையிலிருந்து 3 காா்களில் வந்த 15 வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனா். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

இந்நிலையில், இந்த சோதனை புதன்கிழமையும் தொடா்ந்தது. ஏற்கெனவே வந்திருந்த அதிகாரிகள் குழுவினருடன், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று பெருமாநல்லூா் பகுதியில் உள்ள மேலும் 2 பனியன் நிறுவனங்கள் என மொத்தம் 5 பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தினா். பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

வருமான வரித் துறையினா் அதிரடியாக சோதனை நடத்திய போதிலும் பனியன் நிறுவனங்களில் தொழிலாளா்கள் வழக்கம்போல பணியைத் தொடா்ந்தனா். இந்த சோதனையையொட்டி அனைத்து நிறுவனங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில், ஹவாலா பணப் பரிமாற்றம் தொடா்பாக இந்த சோதனை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com