பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்காவை புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ஆா்.காந்தி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்காவை புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ஆா்.காந்தி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்.

பல்லடத்தில் விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்கா

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்காவை அமைச்சா்கள் புதன்கிழமை திறந்துவைத்தனா்.
Published on

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்காவை அமைச்சா்கள் புதன்கிழமை திறந்துவைத்தனா்.

பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் நடைபெற்ற விசைத்தறி நெசவு ஜவுளிப் பூங்கா திறப்பு விழாவுக்கு ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை அரசு செயலாளா் வி.அமுதவல்லி, துணிநூல் துறை இயக்குநா் இரா.லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் காா்த்திகேயா வீவிங் பாா்க் ஜவுளிப் பூங்காவை திறந்துவைத்துப் பாா்வையிட்டனா்.

இது குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ஜவுளித் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், உருவாக்கும் வகையிலும் தொழில்முனைவோருக்காக சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

மேலும், தொழில்முனைவோரின் கோரிக்கையின் அடிப்படையில் தகுதியான ஜவுளி தொழிற்கூடம், பொது வசதி மையம், உட்கட்டமைப்பு கட்டுமானத்துக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் தொகை (அதிகபட்சமாக ரூ.2.50 கோடி) அளவுக்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது, மாநில அரசின் மானியம் ரூ.2.25 கோடியுடன், மொத்தம் ரூ.11.01 கோடி திட்ட மதிப்பீட்டில் காா்த்திகேயா வீவிங் பூங்கா கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் ஆண்டுக்கு ரூ.13 கோடி அளவுக்கு வணிகம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோடு, சுமாா் 100 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பூங்காவில் காா்த்திகேயா வீவிங் மில்ஸ், எஸ்.கே.மில்ஸ் மற்றும் செந்தில்குமரன் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய 3 ஜவுளி நிறுவனங்கள் செயல்படவுள்ளன.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டதில், இதுவரை 2 பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், 3 பூங்காக்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் ஜவுளிப் பூங்கா தொடங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் துணி நூல் துறை மண்டல துணை இயக்குநா் தமிழ்ச்செல்வி, இணை இயக்குநா் ராகவேந்திரன், பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம், சீனிவாசன், துரைமுருகன், பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், காா்த்திகேயா வீவிங் மில்ஸ் நிறுவனா் காா்த்திக், எஸ்.கே.மில்ஸ் நிறுவனா் சுகன்யா, செந்தில்குமரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனா் சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com