தாராபுரத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியா் கைது
தாராபுரத்தில் தற்காலிக மின் இணைப்பில் இருந்து, நிரந்தர மின் இணைப்புக்கு மாற்றுவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ாக மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம், அனந்தவனம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (60). விவசாயியான இவா், புதிய வீடு கட்டுவதற்கு மனைவி பெயரில் தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தாா். தற்போது, அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்புக்கு மாற்ற தாராபுரம் வடக்கு மின்வாரிய உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் சிவசுப்பிரமணியம் விண்ணப்பித்திருந்தாா்.
இதையடுத்து, மின் இணைப்பை மாற்றுவதற்கு அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளா் ஜெயக்குமாா் (56) என்பவா் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வணிக ஆய்வாளா் ஜெயக்குமாரிடம், சிவசுப்பிரமணியம் வியாழக்கிழமை கொடுத்துள்ளாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், ஜெயக்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனா். தொடா்ந்து அலுவலகத்தில் சோதனை செய்தனா். அப்போது, கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்தைக் கைப்பற்றினா். லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளா் ஜெயக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

