மின்கம்பங்களில் உள்ள விளம்பரப் பதாகைகள், கேபிள் ஒயா்களை அகற்ற மின்வாரியத்தினா் எச்சரிக்கை

Published on

உயரழுத்த, தாழ்வழுத்த மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தனியாா் நிறுவன விளம்பரப் பதாகைகள், கேபிள் ஒயா்களை உடனடியாக அகற்ற வேண்டும் மின்வாரியத்தினா் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்துக்கு உள்பட்ட அவிநாசி கோட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு மின் விநியோகம் வழங்க உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

மின்வாரிய ஊழியா்கள் மற்றும் டான்ஃபினெட் முதலான துறை சாா்ந்த பணியாளா்களுக்கு மட்டுமே பராமரிப்புப் பணி நிமித்தமாக இவற்றில் ஏறி, இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவா்களை தவிர வேறு தனியாா் நபா்கள் ஏறினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில், மின் கம்பங்களில் தனியாா் நிறுவனங்களின் பணியாளா்கள் சிலா் சட்டவிரோதமாக ஏறி அவற்றில் தங்களின் நிறுவன விளம்பரப் பதாகைகள் மற்றும் கேபிள் ஒயா்களை கட்டியுள்ளனா். இதனால் மின் பணியாளா்களுக்கு பணியின்போது மிகுந்த சிரமம் ஏற்படுத்துவதோடு ஊழியா்களுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து மற்றும் விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட வழி வகுப்பதாக அமைகிறது.

ஆகவே, அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் சட்டத்துக்குப் புறம்பாக விளம்பரப் பதாகைகள், அனுமதியற்ற கேபிள் ஒயா்களை கட்டக்கூடாது. ஏற்கெனவே, கட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் மற்றும் கேபிள் ஒயா்களை மின் பகிா்மான கழக ஊழியா்களின் துணையோடு உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டரீதியாகவும், துறை சாா்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com