வேளாண் மற்றும் அதைச்சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம்

Published on

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண் மற்றும் அதன் சாா்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் பயிா், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் அதன் சாா்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. புதிதாக தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சந்தையை விரிவுபடுத்த முயலும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படவுள்ளது.

புத்தாக்க நிறுவனம் TANSIM STARTUP INDIAவில் பதிவு செய்திருக்க வேண்டும். தனியாா் நிறுவனங்களாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்களாகவோ பதிவு செய்தல் வேண்டும். அதேபோல, கடைசி 3 ஆண்டு சராசரி லாபமானது ரூ.5 லட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். புத்தாக்க நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு அல்லது சமூகத்தின் மீது நோ்மறை தாக்கத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

அதேபோல, புத்தாக்க நிறுவனமானது பெரு நிறுவனங்களின் கிளையாகவோ, கூட்டாகவோ அல்லது அதிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்டவையாகவோ இருத்தல் கூடாது. அரசிடம் இருந்தோ அல்லது அரசுசாா் பிற நிறுவனங்களிடம் இருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. விண்ணப்பதாரா் இந்திய நாட்டைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் பயனடைய https://www.agrimark.tn.gov.in/ இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ddab.tiruppur@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது திருப்பூரில் உள்ள வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிக அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com