முதலிபாளையத்தில் பாறைக்குழியில் கொட்டிய குப்பைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் போராட்டம்
முதலிபாளையத்தில் பாறைக்குழியில் கொட்டிய குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தியதால் கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீா் வசதி, தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும், இதர திட்டப் பணிகள் குறித்தும் வரவு செலவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அசோகன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்தி உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
இந்த நிலையில் முதலிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பயன்பாடற்ற பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றக் கோரியும், பாதிக்கப்பட்ட நிலத்தடி நீருக்கு உரிய பதில் தரக்கோரியும், கிராமத்துக்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட மக்கள், கிராம சபை கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணிக்காக அதிக அளவில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். முன்னதாக கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தியபடி வந்தனா். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
