திருப்பூரில் மதுபோதையில் வடமாநில இளைஞரை கொலை செய்தவா் கைது
திருப்பூரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் வடமாநில இளைஞரை கொலை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் வஞ்சரா (25). இவரது மனைவி, குழந்தைகள் அஸ்ஸாமில் வசித்து வருகின்றனா். இவா் திருப்பூா், சிறுபூலுவபட்டி, தெய்வீகா நகா் 5-ஆவது வீதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வந்தாா்.
இவருடன் தங்கியுள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அனில் கெகேட்டா (22) என்பவரிடம் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனில் கெகேட்டா, கத்தியால் ஆகாஷ் வஞ்சராவை குத்தியால் குத்தி கொலை செய்தாா். இதைத் தடுக்க சென்ற பிகி ப்ரோஜா (25) என்பவரும் காயமடைந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆகாஷ் வஞ்சராவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து அனில் கெகேட்டாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
