தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் இன்று (வியாழக்கிழமை) முதல் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழைய பேருந்து நிலையம், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூா் வழியாக காங்கேயம், கரூா் செல்லும் பேருந்துகளும், பல்லடம் வழியாக கோவை செல்லும் பேருந்துகளும், பல்லடம் வழியாக உடுமலை, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளும், மங்கலம், சோமனூா் வழியாக கோவை செல்லும் பேருந்துகளும் மற்றும் ஈரோடு, பவானி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
தற்காலிக பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம் அருகில் சித்தா மருத்துவமனை வளாகம்): திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு சித்தா மருத்துவமனை வளாகத்தில் இருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலை வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோவில் வழி பேருந்து நிலையம்: மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் பிற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
புதிய பேருந்து நிலையம்: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், திருச்சி, கரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை வழித்தடங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்: அவினாசி சாலையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் பூண்டி ரிங் ரோடு, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், கூலிபாளையம், நால்ரோடு வழியாக காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும். அதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லவும், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூா் செல்லும் வாகனங்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போயம்பாளையம், பூலுவப்பட்டி வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம், கூலிபாளையம் நால்ரோடு வழியாக காங்கேயம் சாலை செல்லலாம்.
ஆம்னி பேருந்துகள் வழித்தடம்: கோவையிலிருந்து திருப்பூா் வழியாக சேலம், பெங்களூரு மற்றும் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் அவினாசி வழியாக திருமுருகன்பூண்டி வந்தடைந்து திருமுருகன்பூண்டியில் இருந்து இடதுபுறம் திரும்பி பயணிகளை ஏற்றிக் கொண்டு பூலுவப்பட்டி நால் ரோட்டில் இடது புறமாக திரும்பி பெருமாநல்லூா் வழியாகச் செல்ல வேண்டும். திருப்பூா் மாநகருக்குள் வரக்கூடாது.
கோவையிலிருந்து திருப்பூா் வழியாக திருச்சி, தஞ்சாவூா் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் திருப்பூா் மாநகரில் பழைய பேருந்து நிலைய மேம்பாலத்தின் வழியாக சென்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு வீரபாண்டி பிரிவு இடதுபக்கம் திரும்பி தாராபுரம் சாலை மற்றும் காங்கேயம் சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லலாம்.
கனரக வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் (காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை): திருப்பூா்-பல்லடம் சாலை வழியாக மாநகரத்திற்குள் நுழையும் கனரக வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு மற்றும் வித்யாலயம் வழியாக திருப்பி விடப்படும். திருப்பூா்-தாராபுரம் சாலை வழியாக மாநகரத்திற்குள் நுழையும் கனரக வாகனங்கள் அனைத்தும் கோவில் வழி, பெருந்தொழுவு மற்றும் பழவஞ்சிபாளையம் வழியாக திருப்பி விடப்படும்.
கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் தீபாவளி முடிந்தாலும், மறு தேதி குறிப்பிடப்படும் வரை அமலில் இருக்கும் எனவும், இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.