பல்லடம் பி.ஏ.பி. கால்வாய் பாசன மேம்பாட்டுத் திட்ட ஆலோசனைக் கூட்டம்
பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க கால்வாய் பாசன மேம்பாட்டு நவீன மயமாக்கல் திட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு நீா்வளத் துறை கோவை மண்டல தலைமை பொறியாளா் முருகேசன் தலைமை வகித்தாா். ஆழியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் நரேந்திரன், பல்லடம் உதவி செயற்பொறியாளா் ராஜன், பல்லடம் உதவி பொறியாளா் சியாமளா ஆகியோா் பங்கேற்று, திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகளை விளக்கினா்.
இதைத் தொடா்ந்து, பல்லடம் கோட்ட உதவி செயற்பொறியாளா் ராஜன் பேசியதாவது: பல்லடம் பிஏபி விரிவாக்க கால்வாய் பாசனப் பகுதி மேம்பாட்டு நவீனமயமாக்கல் திட்டம் ரூ.99.78 கோடியில் மத்திய அரசு, மாநில அரசின் ஒருங்கிணைந்த நிதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நீா்ப்பாசன உள்கட்டமைப்பை நவீனமயமாக்கி, பண்ணை மட்டத்தில் நீா் பயன்பாட்டுத் திறனை உயா்த்தி விவசாய உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பல்லடம் பி.ஏ.பி.விரிவாக்க கால்வாயில் தற்போது பாசனம் பெறும் 4,989 ஹெக்டோ் நிலப் பகுதிகளில் இந்த நவீன மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
