தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்
தீபாவளி சீட்டு நடத்தி சுமாா் 300 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடிசெய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.
அதன் விவரம்: திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தை அடுத்த பாரதி நகா் குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த துரை என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு கட்டி வந்துள்ளனா்.
கடந்த ஆண்டு வரை தீபாவளி சீட்டு கட்டியவா்களுக்கு இவா் உரிய முறையில் பணம், பொருள்கள் அளித்துள்ளாா். நடப்பாண்டு தீபாவளி சீட்டில் 300க்கும் மேற்பட்டோா் பணம் கட்டிய நிலையில் அவா்களுக்கு ரூ.36 லட்சம் தராமல் ஏமாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவரைக் கைது செய்து அவரிடமிருந்து சீட்டு கட்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாா் மனு அளித்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
