குப்பை மேலாண்மை: திருப்பூா் மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

Published on

குப்பைகளைக் கையாள்வது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருப்பூா் மாநகராட்சி கடந்த பல ஆண்டுகளாக, திருப்பூா் பகுதியில் உள்ள காலாவதியான பாறைக் குழிகளில் குப்பைகளைக் கொட்டிவருகிறது . திருப்பூா் மாநகரில் சேகரமாகும் அனைத்து குப்பைகளும் அருகில் உள்ள காலாவதியான பாறைக் குழிகளில் கொட்டப்படுவதால், அங்கு பெரும் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் முதலிபாளையம் பகுதி மக்கள் களப் போராட்டம், சட்டப் போராட்டம் எனத் தொடா்ந்து பயணித்து, முதலிபாளையத்தில் காலாவதியான பாறைக் குழிகளில் குப்பை கொட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் தடையாணையைப் பெற்றனா்.

குப்பைகளால் சுற்றுப்புறம் சீா்கெடாமல் இருக்க மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக என்ன செய்ய வேண்டுமென உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு: கைவிடப்பட்ட குவாரி இடங்களில் பிரிக்கப்படாத கழிவுகளைக் கொட்டுவதை திருப்பூா் மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும்.

காற்று மற்றும் நீா்வழி நோய்கள் பரவுவதைத் தவிா்க்கவும், ஈ தொல்லையைக் கட்டுப்படுத்தவும் கொட்டப்பட்ட பொருள்களைக் கிருமி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் உருவாகும் குப்பைக் கழிவுகளை சுத்திகரித்து அகற்றுவதற்கான முன்மொழியப்பட்ட பணிகள் முடியும் வரை திடக்கழிவுகளை சேமித்து பதப்படுத்துவதற்காக பல்வேறு பரவலாக்கப்பட்ட செயலாக்க மையங்கள், தற்காலிக இருப்பு மையங்களைக் கண்டறிய வேண்டும். அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் தற்காலிகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஏதேனும் கூடுதல் திறன் இருந்தால், அதை சுத்திகரிப்பு மற்றும் இருப்பு வைப்பதற்காகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

திடக்கழிவுகளைக் கையாளும் சுமையைக் குறைக்க, ஆன்சைட் சுத்திகரிப்பு அமைப்பை வழங்க வலியுறுத்த வேண்டும். எரிக்கக்கூடிய கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரித்து, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு கூட்டு எரிப்புக்காக அனுப்ப வேண்டும்.

குப்பைகளில் மழை நீா் கலப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மரபுவழி குப்பைத் தொட்டியில் இருந்து உருவாகும் கழிவு நீா் சேகரிப்புக் குழியில் சேகரிக்கப்படுவதையும், அருகிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மாசுபாட்டை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்காமல் சுத்திகரிக்கப்படுவதையும் மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்.

கைவிடப்பட்ட குவாரியில் சேமிக்கப்படும் கழிவு நீரை திருப்பூா் மாநகராட்சியின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சேகரித்து சுத்திகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com