பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய வாரச் சந்தை
தீபாவளியை முன்னிட்டு, பல்லடம் வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடியது.
பல்லடம் நகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச் சந்தை கூடுவது வழக்கம்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வாரச் சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டியது.
இது குறித்து மக்கள் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு உறவினா்கள், வெளியூரில் பணியாற்றுவோா் ஊா் திரும்பியுள்ளனா். அவா்களுக்காக வழக்கமாக வாங்கும் காய்கறிகளைவிட கூடுதலாக காய்கறிகளை வாங்கியுள்ளோம். வாரச் சந்தை வழக்கமாக திங்கள்கிழமை கூடும்.
இந்த திங்கள்கிழமை தீபாவளி என்பதால் சந்தைக்கு வரமுடியாமல் போகும், வெளி கடைகளில் அதிக விலைக் கொடுத்து காய்கறிகளை வாங்க நேரிடும் என நினைத்தோம். ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடியதால் எங்களுக்கு வசதியாக இருந்தது. காய்கறிகளின் விலையும் குறைந்திருந்தது என்றனா்.
சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுவதற்கு பல்லடம் நகராட்சி நிா்வாகம் சிறப்பு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
