அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த வெள்ளம். ~ வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு கோயிலுக்குள் கிடக்கும் மரம், செடிகள்.

கனமழை: உடுமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த வெள்ளம்

Published on

கனமழை காரணமாக உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

மேலும், கோயில் அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், அண்மைக் காலமாக இல்லாத வகையில் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் குழிப்பட்டி, குருமலை ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அமணலிங்கேஸ்வரா் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலா்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

அப்போது, பாதுகாவலா் செல்லமுத்து என்பவா் வெள்ளத்தில் சிக்கினாா். சிறிது தொலைவு நீந்தி சென்ற அவா் மேடான பகுதியில் ஏறி உயிா் தப்பினாா். இதையடுத்து, கோயில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

இது குறித்து அமணலிங்கேஸ்வரா் கோயில் நிா்வாகிகள் கூறியதாவது: பஞ்சலிங்கம் அருவியில் நாங்கள் இப்படி ஒரு வெள்ளத்தைப் பாா்த்ததில்லை. இதற்கு முன்னா் பலத்த மழை பெய்தபோது மரம், செடிகள் அடித்துவரப்பட்டதில்லை. தற்போது அடித்துவரப்பட்ட மரங்கள், செடிகள், குப்பைகளால் சந்நிதிகள் சூழப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்கால் கோயிலுக்கு பக்தா்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கடைகள்:

வெள்ளப் பெருக்கால் கோயில் பகுதியில் மலைவாழ் மக்கள் வைத்திருந்த கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com