தீபாவளிப் பண்டிகை: புத்தாடைகள் வாங்க கடைசி நேரத்தில் குவிந்த மக்களால் திணறிய திருப்பூா்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கடைசி நேரத்தில் புத்தாடைகள், இனிப்புகள் வாங்க மக்கள் கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை (அக்டோபா் 20) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள், அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 9 நாள்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடும்பங்களுடன் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கின்றனா்.
இந்நிலையில், புத்தாடைகள், இனிப்புகள் வாங்க திருப்பூரில் கடை வீதிகளில் மக்கள் கடந்த ஒரு வாரமாக குவிந்து வந்தனா். ஆனால், பல இடங்களில் மழை, அதிக அளவிலான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடா்பாடுகள் இருந்தன.
இதனால், கடைசி நேரத்தில் புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்ளலாம் என எண்ணிய மக்கள் கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே குவிந்தனா். ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம், நகைக் கடைகளில் கூட்டம் களைகட்டியது.
அதிக அளவிலான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடை வீதிகள் நிரம்பி வழிந்தன. மேலும், மாநகரப் பகுதியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு போக்குவரத்தை சீா் செய்தனா்.
