மாநில இளைஞா் திருவிழா: சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் தோ்வு
திருப்பூா்: விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநில இளைஞா் திருவிழாவில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2 போ் தோ்வாகியுள்ளனா்.
மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் தமிழநாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பாக சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமைமுதல் அக்டோபா் 27-ஆம் தேதி வரை மாநில அளவிலான இளைஞா் திருவிழா நடைபெற உள்ளது.
இம்முகாமில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் இருந்து 230 நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா். இம்முகாமில் ஆவணப்படம் எடுத்தல், நாடகம் மற்றும் மௌன நாடகம் உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிப் பட்டறைகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகங்களின் சாா்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இம்முகாமில் பங்கேற்க கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 மாணவா்கள், 5 மாணவிகள் என மொத்தம் 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வணிகவியல் துறை மாணவா் ராஜன் எட்வா்ட் மற்றும் கணிதவியல் துறை மாணவி பிரியங்கா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பாரதியாா் பல்கலைக்கழக அணியை அலகு 2-இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் தலைமையேற்று வழிநடத்தி செல்கிறாா். இவா்களை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமையில் பேராசிரியா்கள் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை வழியனுப்பி வைத்தனா்.
