ஆந்திர பேருந்து தீ விபத்தில் திருப்பூா் இளைஞா் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞரும் உயிரிழந்துள்ளாா்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பேருந்து கா்னூல் மாவட்டம் சின்னத்தேகூா் அருகே கடந்த புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளாகி பேருந்தின் அடியில் சென்றுள்ளது.
அப்போது அந்த மோட்டா் சைக்கிளின் எரிபொருள் டேங்க் வெடித்ததில் பேருந்தும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளாா்.
திருப்பூா் பூலுவபட்டி தோட்டத்துபாளையம் லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜா (63). இவரது மகன்கள் ஜெயபிரகாஷ் (25), யுவன்சங்கர்ராஜா (23). ராஜா அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். ஜெயபிரகாஷ் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். பி.எஸ்சி படிப்பு முடித்த யுவன்சங்கா் ராஜா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியாா் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தில் வேலைக்கு சோ்ந்தாா்.
மேலும், தமிழகத்திலும் வேலை தேடி வந்தாா். இந்நிலையில் சேலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த யுவன்சங்கர்ராஜாவுக்கு நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு திருப்பூருக்கு அவா் வராததால் சேலத்தில் நடைபெறும் நோ்காணலை முடித்துவிட்டு பெற்றோரைப் பாா்க்க திருப்பூா் வர திட்டமிட்டிருந்தாா். இந்நிலையில், தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்தில் பயணித்த யுவன்சங்கர்ராஜா உடல் கருகி உயிரிழந்துள்ளாா்.
உடல் முழுவதும் எரிந்துவிட்டதால் அவரது உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின்பேரில் அவா்கள் கா்நூல் மாவட்டத்துக்கு விரைந்தனா். அங்கு அவரது பெற்றோரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் உறுதி செய்யப்பட்ட பின்னரே அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

