
அவிநாசியில் சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
ஏஐடியூசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் நகராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி நிா்வாகத்தினா்.
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்திய நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஏஐடியூசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் நகராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
அவிநாசி-சேவூா் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையோரமாக பழக்கடை, பூக்கடை, உணவுக் கடை உள்ளிட்ட பல வகையான வியாபாரங்கள் செய்து வந்தனா்.
இந்நிலையில், இந்தக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன, வணிகா்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது எனக் கூறி, இந்தக் கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா், போலீஸாா் உதவியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்திவிட்டனா். இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
நகராட்சியால் முறைகேடாக அமைக்கப்பட்ட வணிகா் குழுவை கலைக்க வேண்டும். புதிதாகத் தோ்தல் நடத்தி வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் கடை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற போராட்டத்தின் நிறைவாக, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி வியாபார தடை பகுதிகளில் சாலையோரக் கடைகள் அமைக்காமல் இருக்க வேண்டும். மேலும் ஒரு வார காலத்துக்குள் வணிகக் குழு கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






