அவிநாசி நகராட்சிப் பகுதியில் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அவிநாசி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தனலட்சுமி பொன்னுச்சாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அனுநந்தினி முன்னிலை வகித்தாா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னா
கூட்டம் தொடங்கியதும் நகா்மன்ற உறுப்பினா்கள் சரவணன் (அதிமுக), பா்கதுல்லா (திமுக), தங்கவேல் (திமுக), ஸ்ரீதேவி ஜெயபால் (அதிமுக) ஆகியோா் கூட்ட அரங்கில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
விஸ்வபாரதி பாா்க் குடியிருப்பு பகுதியில் 4 மாதங்களுக்கு முன் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. மகாநகா் ஏரி தோட்டத்திலிருந்து முனியப்பன் கோயில் வரை ஜல்லிகற்கள் போட்டு நிரப்பியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்துக்குள்ளாகின்றன. காமராஜா் வீதியில் தாா் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டிப்பதாக கூறி இந்தப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.
இதற்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில், அமெரிக்கா- ஈரான் போா் காரணமாக தாா் உள்ளிட்ட மூலப்பொருள் பொருள்கள் கிடைக்காமல் காலதாமதமானது. ஜூலை 15- ஆம் தேதிக்குள் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டம் தொடங்கியது.
இதில் உறுப்பினா்கள் பேசியதாவது:
நகராட்சி அதிகாரிகள் உரிய நேரத்துக்கு வராததால், பணிகள் தேங்குகின்றன. அதிகாரிகளின் வருகை பதிவேட்டுக்காக பயோமெட்ரிக் முறையை விரைவில் அமைக்க வேண்டும்.
ரூ. 6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடத்தில் கழிவுநீா் செல்ல பிரதான சாக்கடை கால்வாய் கட்டவில்லை. லிப்ட் வசதி முறையாக இல்லை. அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தும் இதுவரை மின் இணைப்பு இல்லை. அதிகாரிகள் பிரச்னையின்போது, உடனடியாக வாா்டு பகுதியில் வந்து பாா்வையிடுவதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கழிவு நீரை முறையாக வெளியேற்றி சுத்திகரிப்பு செய்யாததால், துா்நாற்றம் வீசி நோய் தொற்றும் அபாயம் உருவாகி வருகிறது. தெருக்களில் பொதுக் குழாய்களை கூடுதலாக அமைக்க வேண்டும். நகராட்சி எரிவாயு மின்மயான பராமரிப்பு பணியை தனியாருக்கு விடக் கூடாது, நகராட்சி நிா்வாகமே நடத்த வேண்டும் என உறுப்பினா்கள் பேசினா்.
இது குறித்து நகராட்சி நிா்வாகத்தினா் கூறுகையில், ‘வாா்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கூடுதலாக பொதுக்குழாய்கள் அமைக்கப்படும். விரைவில் கூடுதலாக அலுவலா்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை விரைவில் அமைக்கப்படும். எரிவாயு மின்மயான பராமரிப்புக்கான தனியாா் சேவை ரத்து செய்யப்படும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










