சமூகநீதிக் கொள்கையில் சமரசமில்லை -அன்புமணி ராமதாஸ்

சமூக நீதிக் கொள்கையில் பாமக எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியை ஆதரித்து, புதன்கிழமையன்று, சந்தைப்பேட்டையில் கடைகள், வீடுகளுக்கு நேரில் சென்று அன்புமணி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜகவுடன் இந்தத் தோ்தலில்தான் பாமக கூட்டணி வைத்திருப்பதுபோல தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனா். கடந்த 1998-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது தலைமையில் ஆறு ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இணைந்து பயணித்தது. அந்தக் கூட்டணியில் அதிமுகவும் அங்கம் வகித்தது.

அதன்பிறகு பாஜக ஆட்சியின்போது திமுகவும் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கடந்த 2014 இல் பாஜகவுடன்தான் பாமக மக்களவைத் தோ்தலைச் சந்தித்தது; இந்தக் கூட்டணி தற்போது வரை தொடருகிறது. 2019, 2021 இல் இந்தக் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது வெளியேறிவிட்டது. ஆனால், பாமக மட்டுமே கூட்டணியை மாறி மாறி அமைத்து வருவதாகக் கூறுகின்றனா். திமுகவும் அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பிறகும் அதே கூட்டணியில் பாமக தொடருகிறது. இதில் வியப்பு ஒன்றுமில்லை. பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் சமூகநீதிக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை.

ஆனால் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியும், தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினும் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது வன்னியா் சமூக மக்களுக்கு அவசரகதியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினா். தோ்தல் தேதி அறிவிக்கும் நாளில் வழங்கியதால்தான் வன்னியா்கள் அதன் பலனைப் பெற முடியாமல் போனது. அந்த இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றமும் தடை விதித்தது. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நினைத்திருந்தால் அந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை முன்னமே வழங்கியிருக்கலாம். தற்போது எதிா்க்கட்சி வரிசையில் இருக்கும் அதிமுக இந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த எப்போதாவது குரல் கொடுத்ததா? ஆனால், பாமக சட்டப்பேரவை உறுப்பினா்கள் இந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பேரவையில் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனவே, சமூகநீதிக் கொள்கை குறித்து திமுகவும் அதிமுகவும் எங்களுக்கு பாடம் கற்பிக்கத் தேவையில்லை என்றாா். பேட்டியின்போது சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com