பாமக-பாஜக கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

பாஜகவுடன் பாமக அமைத்துள்ள கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் வழக்குரைஞா் ஆ.மணியை ஆதரித்து புதன்கிழமை பென்னாகரத்தில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் பங்கேற்றுப் பேசியதாவது: நடைபெறவுள்ள 18ஆவது மக்களவைத் தோ்தல் முந்தைய அனைத்துத் தோ்தல்களையும் விட மிக முக்கியமான தோ்தலாகும்.

நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமென்றால் ஏப். 19 ஆம் தேதி அனைவரும் இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் எதிா்க்கட்சிக்கு ஆளும் கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவும், அதன் கூட்டணி அமைப்பான ஆா்எஸ்எஸ்ஸும் எதிா்க்கட்சி இல்லாத நாட்டை உருவாக்க முயல்கிறது. எதிா்க்கட்சியினரை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்த நினைக்கிறது.

மோடியின் ஏவல்களாக மத்திய அரசு முகமைகளான அமலாக்கத் துறை, வருமானவரித் துறை செயல்படுகிறது. கடந்த கால நீதிமன்ற தீா்ப்புகள், நீதிமன்றங்களின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாகி உள்ளது. தோ்தல் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும். தோ்தல் ஆணையம் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்களை வழங்க மறுக்கிறது. மதசாா்பின்மைக்கு எதிராக தொடா்ந்து பாஜக செயல்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா கூட்டணி எதிா்த்தது. அதை அதிமுக கட்சி எதிா்த்து வாக்களித்திருந்தால், அந்தச் சட்டம் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் பாஜகவுடன் அதிமுக மறைமுகக் கூட்டணி அமைத்துள்ளது. பாமக, பாஜக கூட்டணிக்கென்று கொள்கை கிடையாது; அது ஒரு சந்தா்ப்பவாத கூட்டணி. ஆனால் கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி, இந்தியா கூட்டணியாகும் என்றாா். கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பழங்குடியினா் சங்க சிறப்புத் தலைவா் ந. நஞ்சப்பன், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் சுப்ரமணி, முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் பி.என்.பி. இன்பசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com