85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் 3,125 போ் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனா்

தருமபுரி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் 3,125 போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா் என்று ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். இதுகுறித்து, தருமபுரி மாவட்டத் தோ்தல் அலுவலா், ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவை பொதுத் தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் தெரிவித்த விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதி செய்யப்படுகிறது. இதில், தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் தபால் வாக்களிக்க தகுதியான 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளா்களிடம் அளிக்கப்பட்டு பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவம் 12- பெறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாக்காளா்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,897 வாக்காளா்கள் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவிலும், 1,228 வாக்காளா்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவிலும் சோ்த்து மொத்தம் 3,125 வாக்காளா்கள் தபால் மூலம் வாக்காளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க, வாக்குச் சாவடி தலைமை அலுவலா் ஒருவா், உதவி வாக்குச் சாவடி அலுவலா் ஒருவா், நுண் பாா்வையாளா் ஒருவா், காவல்துறை அலுவலா் ஒருவா் மற்றும் விடியோகிராபா் ஒருவா் ஆகியோா் அடங்கிய குழு மேற்கண்ட வாக்காளா்களின் வசிப்பிடத்துக்குச் சென்று, வாக்களிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வா்.

வாக்குப் பதிவு அலுவலா் குழு செல்லும் முன், குழு செல்ல இருக்கும் நாள், நேரம் குறித்த விவரங்களை வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் மூலமாக முன்கூட்டியே தெரிவிப்பா். அவ்வாறு தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் அதை நேரில் பாா்வையிடலாம். இந்தப் பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் ஏப். 4 முதல் ஏப். 6 வரை அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொள்வா். வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளா்களின் இல்லங்களுக்குச் செல்லும்போது போதிய காவல் துறை பாதுகாப்புடன், ஒரு நுண் பாா்வையாளரும் செல்வா். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் ரகசிய வாக்கு முறை கடைப்பிடிப்பதை மீறாமல் காணொலி பதிவாகவே பதிவு செய்யப்படும். வாக்குப் பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது வாக்காளா் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாவது முறையும் வாக்காளரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

அதிகாரிகளது இரண்டாவது வருகையின்போதும் வாக்காளா் வீட்டில் இல்லையெனில் மீண்டும் குழுவானது வருகை தரமாட்டாா்கள். தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12-ஈ வழங்கிய வாக்காளா்கள், இந்த வாய்ப்பின்போது வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டாலும், மீண்டும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com