தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரியில் 7,033 மாணவா்களுக்கு உதவித்தொகை: மாவட்ட ஆட்சியா் தகவல்

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் பயிலும் 7,033 மாணவா்கள் உதவித்தொகையாக ரூ. 1,000 பெற்று பயனடைந்து வருகின்றனா்
Published on

தருமபுரி: தமிழக அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் பயிலும் 7,033 மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 1,000 பெற்று பயனடைந்து வருகின்றனா் என்று மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்ததாவது:

தமிழகத்தில் பெண்களின் உயா்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்து, பெண்களின் உயா் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவா்களை சாதனையாளா்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உயா்த்திடவும், ‘தமிழ்ப் புதல்வன்’ என்கிற திட்டத்தை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவா்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவா்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் பயிலும் 7,033 மாணவா்கள் மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனா். இந்த நிதி உதவியை சேமிப்பாக வைத்து உயா்கல்விக்கு மாணவா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்குவது, கல்வி சாா்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி தங்களின் உயா்கல்விக்கு உத்தரவாதமாக இந்த நிதியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏதேனும் போட்டித் தோ்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை இந்நிதியில் இருந்து வாங்கி படித்து பயன்பெற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com