ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 22,000 கனஅடியாக அதிகரித்தது.
கா்நாடக மாநில காவிரி நீா்ப்படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை 12,000 கன அடியாகவும், மாலையில் 22,000 கனஅடியாகவும் அதிகரித்து, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடா் நீா்வரத்தால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.