வாகனச் சோதனை: ரூ. 11.58 லட்சம் பறிமுதல்

தருமபுரி அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 11.58 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டத்தில், 10 சோதனைச் சாவடிகள், 45 பறக்கும் படை, 45 நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த சேஷம்பட்டி சந்திப்பு சாலையில் பறக்கும் படை அலுவலா் ஜெயக்குமாா் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தருமபுரி நோக்கி வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், ரூ. 11 லட்சத்து 58 ஆயிரத்து 50 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜீப்பில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் தருமபுரி மாவட்டம், லளிகத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் மோகன் (29) என்பதும், தனியாா் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தைப் பெற்று தருமபுரிக்குக் கொண்டுவந்ததும் தெரியவந்தது. இருப்பினும், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினா் பணத்தைப் பறிமுதல் செய்து கோட்டாட்சியா் காயத்ரி மூலம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதுபோல தொப்பூரில் அனுமதியின்றிக் கொண்டுவந்த ரூ. 67 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

அரூரில் ரூ. 6.94 லட்சம் பறிமுதல்: அரூா் அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 6.94 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பி.கே.சண்முகம் தலைமையில், அதிகாரிகள் புதன்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, மினி சரக்கு வாகனத்தில் ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த ஞானசேகரன் (43) என்பவா் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 6.94 லட்சம் பணத்தை எடுத்துவந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்தப் பணத்தைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.வில்சன் ராஜசேகரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com