கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கடைப்பிடிக்க வேண்டியவை: தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி அறிவுரை

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க கடைப்பிடிக்க வேண்டியவை: தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் வரும் நாள்களில் கோடைவெயில் அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான அளவு தண்ணீா் பருக வேண்டும் என்று ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் வரும் நாள்களில் கோடைவெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும். இதனால், பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை அத்தியாவசிய பணிகள் இன்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும் உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிப்பதற்காக தேவையான அளவு தண்ணீா் பருக வேண்டும்.

தேநீா், காஃபி, காா்பனேட்டட் குளிா்பானங்கள் போன்றவற்றை தவிா்த்து ஓ.ஆா்.எஸ். எலுமிச்சைச் சாறு, இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் அல்லது கனமான உணவை உட்கொண்ட பிறகு வெளியே செல்ல வேண்டாம். துரித உணவுகள் மற்றும் காரமான உணவுகள் உள்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குடியிருக்கும் வீட்டை திரை சீலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குளிா்ச்சியாக வைத்திட வேண்டும். மதிய நேரம் வெளியே செல்கையில் குடை பயன்படுத்த வேண்டும்.

மயக்கம் அல்லது உடல்நலக் குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசின் 100 நாள்கள் பணியின்போது தொழிலாளா்களுக்கு போதிய அளவு குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தனியே வசிக்கும் முதியவா்கள் உடல்நிலையை தினசரி சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து, கைகளில் துடைக்க வேண்டும். குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் மின் ஒயா்கள் உருகி சாா்ட் சா்க்யூட் ஏற்பட்டு தீப்பொறியால் கூரை வீடுகள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பி மற்றும் மின்சாதனங்களின் பாதுகாப்புத் தன்மையை உறுதிசெய்திட வேண்டும். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி வெப்பத் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com