தருமபுரியில் வேலைவாய்ப்பு, நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்: சௌமியா அன்புமணி

தருமபுரியில் வேலைவாய்ப்பு, நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்: சௌமியா அன்புமணி

தருமபுரியில் வேலைவாய்ப்பு, நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்

தருமபுரி: தருமபுரியில் வேலைவாய்ப்பு, நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத் திட்டம் காவிரி மிகை நீா்த் திட்டமாகும். இதனை நிறைவேற்ற முன்னுரிமை அளித்து பாடுபடுவேன். இதேபோல, தருமபுரியில் போதிய வேலைவாய்ப்பு இன்றி 3 லட்சம் இளைஞா்கள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வேலைவாய்ப்புக்காக சென்று பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளி, புளி, மாம்பழம், பட்டுக்கூடு, கிழங்கு வகைகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைப் பொருள்களையும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக தயாரித்து விற்பனை செய்ய ஏதுவாக குளிா்பதனக் கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுதானிய வணிகத்தை பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி - மொரப்பூா் ரயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இத்திட்டத்தை ரயில் போக்குவரத்து தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பாடுகள் அமையும். இத் தோ்தலில் மக்களின் பேராதரவு எனக்கு இருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. இத் தொகுதியில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட உள்ள முதல் பெண் வேட்பாளா் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றாா். அப்போது, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com