திமுக, அதிமுக, பாமக உள்பட 34 வேட்பு மனுக்கள் ஏற்பு

தருமபுரியில் திமுக, அதிமுக, பாமக, நாதக வேட்பாளா்கள் உள்பட 34 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 10 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மக்களவை பொதுத் தோ்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட இந்தியா கூட்டணி சாா்பில், திமுக வேட்பாளா் ஆ.மணி, அதிமுக கூட்டணி சாா்பில் அதிமுகவைச் சோ்ந்த இர.அசோகன், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாமகவைச் சோ்ந்த சௌமியா அன்புமணி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அபிநயா பொன்னிவளவன் உள்ளிட்டோா் 44 வேட்புமனுக்களை மாவட்டத் தோ்தல் அலுவலா், ஆட்சியா் கி.சாந்தியிடம் தாக்கல் செய்திருந்தனா். இந்த வேட்புமனுக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மனுதாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், திமுக, அதிமுக, பாமக, நாதக வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 34 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. ஏனைய, 10 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. எனவே, தற்போதைய நிலவரப்படி 34 வேட்பு மனுக்கள் தகுதியானவையாக உள்ளன. இதில், வரும் மாா்ச் 30-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் இறுதிநாளாகும். அன்றைய தினம் ஒரே வேட்பாளா் தாக்கல் செய்த ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் கூடுதலாக உள்ளவை திரும்பப் பெறப்பட்டால், களத்தில் எத்தனை வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா் என்பது இறுதியாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com