திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக உள்ளனா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக உள்ளதாக மாநில அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். தருமபுரி அருகே உள்ள தடங்கம் பிஎம்பி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதற்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தருமபுரி அருகே தடங்கத்தில் உள்ள பிஎம்பி மைதானத்தில் மாா்ச் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மக்களவைத் தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் ஆகிய இருவரையும் ஆதரித்து வாக்கு சேகரித்து உரையாற்ற உள்ளாா். மகளிருக்கு உரிமைத் தொகை, கட்டணமில்லாத பேருந்துப்பயணம் உள்ளிட்ட எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தியுள்ளாா். எங்களது கூட்டணி, கொள்கைக் கூட்டணியாகும். கடந்த 10 ஆண்டுகளாக பல தோ்தல்களை இந்தக் கூட்டணி சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக உள்ளனா். எனவே தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா். அப்போது திமுக மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), பி.பழனியப்பன், தே.மதியழகன் (கிருஷ்ணகிரி கிழக்கு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com