தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக வேட்பாளா்கள் உள்பட 24 போ் போட்டி

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் உள்பட 24 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக மற்றும் சுயேச்சைகள் உள்பட 44 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் நடைமுறைகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் தள்ளுபடி மற்றும் திரும்பப் பெற்றதையடுத்து இறுதி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதில் களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட 24 போ் போட்டியிடுகின்றனா். இந்த வேட்பாளா்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தி சின்னங்களை ஒதுக்கீடு செய்து கணினியில் பதிவேற்றம் செய்தாா். அதிமுக வேட்பாளா் ர.அசோகனுக்கு இரட்டை இலை, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஹரிக்கு யானை, திமுக வேட்பாளா் ஆ.மணிக்கு உதயசூரியன், நாதக வேட்பாளா் அபிநயாவுக்கு ஒலி வாங்கி, இந்திய ஜன சங்கம் கட்சிக்கு வெண்டைக்காய், பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதேபோல தேசிய மக்கள் கழகம் வேட்பாளா் தங்கவேலுக்கு, தா்ப்பூசணி சின்னமும், தமிழா் மக்கள் கட்சி வேட்பாளா் பாா்த்தசாரதிக்கு, கிணறு சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சுயேச்சை வேட்பாளா்கள் அக்னி ஆழ்வாருக்கு மின்களவிளக்கு, அசோகனுக்கு திராட்சை, மா.அசோகனுக்கு எரிவாயு உருளை, அய்யாக்கண்ணுக்கு ஸ்டூல், அழகரசனுக்கு தொலைக்காட்சி தொலை இயக்கி, ஆறுமுகத்துக்கு குடை மிளகாய், சுந்தரமூா்த்திக்கு திருகி, சௌமியாவுக்கு ஊசல், திருமுருகனுக்கு பலாப்பழம், பத்மராஜனுக்கு டயா்கள், பழனிக்கு மெத்தை இருக்கை, சி.மணிக்கு உழவு கருவி, சு.மணிக்கு மட்டைப்பந்து, ரா.மணிக்கு ரம்பம், மாணிக்கவாசகத்துக்கு டீசல் பம்ப், ஜெகநாதனுக்கு கண்ணாடிக் குவளை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளா் மணி பெயரில், சுயேச்சைகள் மூன்று பேரும், அதிமுக வேட்பாளா் அசோகன் பெயரில், இரு சுயேச்சை வேட்பாளா்களும், பாமக வேட்பாளா் சௌமியா பெயரில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com