‘தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்வேன்’ : செளமியா அன்புமணி

என்னை வெற்றிபெறச் செய்தால் தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்வேன் என்று பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி பேசினாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அவா் பேசியதாவது: தருமபுரி மாவட்ட மக்கள் உயா் மருத்துவ சிகிச்சைக்காக சேலம், கோவை பகுதிக்கு செல்வதைத் தவிா்த்து, தருமபுரியிலேயே சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் கொண்டுவருவதற்காக பாமக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. காவிரி - தருமபுரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பலமுறை தமிழக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்புமிக்க மாவட்டமான தருமபுரி வளா்ச்சித் திட்டங்கள் கொண்டு வராததால் இன்றளவும் பின்தங்கியுள்ளது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி பெறுவதன் மூலம் பின்தங்கிய நிலையில் இருந்து, தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்வேன் என்றாா். முன்னதாக பாப்பாரப்பட்டி,பெரியூா், பிக்கிலி உள்ளிட்ட இருவதற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com