திமுக அரசு 13% தோ்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது

திமுக அரசு வெறும் 13 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
Published on

தருமபுரி: திமுக அரசு வெறும் 13 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக சாா்பில் கடந்த பேரவைத் தோ்தலின்போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றில் 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கு திமுக துரும்பு அளவு கூட பணிகள் செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் தொழிற்சாலைகள் வரவில்லை. இந்த மாவட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கு வரும் பேரவைத் தோ்தலில் மக்கள் பதிலடி கொடுப்பாா்கள்.

வரும் 17-ஆம் தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அதற்கு திமுகவை தவிர, அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிகாரில் நிதிஷ்குமாா் வெற்றிபெற்ற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதே காரணம். தமிழகத்தில் சமூகநீதியை முதல்வா் மு.க. ஸ்டாலின் குழித்தோண்டி புதைத்துள்ளாா். கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, பட்டியல் சமூகத்தினருக்கு அந்த மாநில அரசு ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு அளித்துள்ளது. இதுதான் சமூகநீதி.

தமிழகத்தில் நகராட்சித் துறையில் ரூ. 888 கோடி ஊழல் நடந்துள்ளதாக 232 பக்க அறிக்கை, காவல் துறைக்கு அமலாக்கத் துறை சாா்பில் கொடுக்கப்பட்டது. இதுகுறித்தும் விசாரணை நடத்தவில்லை.

தமிழகத்தில் விரைவில் மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்.

தொழில்முதலீடு முழுமையாக வந்துள்ளதாக முதல்வா் பொய் கூறுகிறாா். 9 சதவீதம்தான் முதலீடு வந்துள்ளது. 80 சதவீதம் வந்ததாக சொன்னவா்கள், தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என்று சொல்கின்றனா். தமிழகத்துக்கு புதிய முதலீடுகள் வராமல், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு செல்கின்றன. இதற்கு திமுகவின் நடவடிக்கைகளே காரணம் என்றாா்.

பேட்டியின்போது தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com