வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி நாளை தொடக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை (டிச. 11) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் வியாழக்கிழமை முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் நடைபெறுகிறது.
இப்பணிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன பொறியாளா்களால் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான மேற்பாா்வையாளராக புதுதில்லி கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் பல்ராம் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தருமபுரிக்கு வரும் இவா் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்வாா். முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளுக்காக அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும் அறையில் எவ்வித மின்னணு சாதனங்களும் கொண்டுசெல்ல அனுமதியில்லை.
காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூய்மை செய்யப்பட்டு, செயல்படும் நிலை குறித்து சரிபாா்க்கப்படும். சரியாக உள்ள இயந்திரங்கள் மட்டும் வரும் சட்டப் பேரைவைத் தோ்தல் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். செயல்படாத இயந்திரங்கள் தனியாக பிரித்து தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.
