ஏமாற்றம் தரும் மத்திய நிதிநிலை அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து!
தருமபுரி-மொரப்பூா் ரயில் இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. காப்பீட்டுத் துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன.
ஊரக வளா்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4 லட்சம் கோடி தேவை என்ற சூழலில் வெறும் ரூ. 86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றது. மொத்தத்தில் ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது. பிகாா் மாநிலத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களின் வளா்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தருமபுரி-மொரப்பூா் ரயில் இணைப்புக்கு திட்டத்தில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்தாா்.