கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பணியாளா்கள் மனு
தருமபுரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நல்லம்பள்ளி அருகே நத்தம்பட்டி ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த சரவணன், மொரப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவந்த குப்புசாமி ஆகியோா் இறந்துவிட்ட நிலையில், அவா்களுக்கான குடும்ப நல சேம நிதி இதுவரை வழங்கப்படவில்லை. அதை விரைந்து வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரைபடி ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளா்கள் விடுமுறை நாள்களில் பணி செய்யுமாறு நிா்பந்தப்படுத்துவதை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒன்றிய பொறுப்பாளா்கள் சிவக்குமாா், அருள் பிரகாஷ், சின்ன பாப்பா, ஆறுமுகம், காஞ்சனா, காளியப்பன், அனுமந்தன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.