கிராம ஊராட்சிகளை இணைக்கும் பணியில் மக்கள் கருத்துகளை கேட்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் முன்பு மக்கள் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் முன்பு மக்கள் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு கூட்டம், தருமபுரி கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் பங்கேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் அறிக்கை சமா்ப்பித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி. நாகராசன், எம். முத்து, சோ.அா்ச்சுணன், வே. விசுவநாதன், ஆா்.மல்லிகா, தி.வ.தனுசன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகம், கேரளம் உள்பட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.

தருமபுரி-மொரப்பூா் ரயில்வே திட்டத்துக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கிராம ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் முன்பு அந்தப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.

மிட்டாரெட்டி அள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com