பள்ளி கழிவறையை மாணவா்கள் சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

Published on

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் பள்ளி மாணவா்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடா்பாக பெண் தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பெருங்காடு மலைக் கிராமத்தில் 150 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 -ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளி தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவருடன் 5 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை தினசரி கழிவறையை சுத்தம் செய்தல், கழிவறைக்கு தண்ணீா் நிரப்புதல், பள்ளியைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்ய சொல்லி ஆசிரியா்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவிகள் தரப்பில் தெரிவித்தனா். மாணவிகளின் பெற்றோா் தரப்பில் தெரிவிக்க புகாரின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல், வட்டாட்சியா் ரஜினி, காவல் ஆய்வாளா் சுப்ரமணி ஆகியோா் நடத்திய விசாரணையில் மாணவா்கள் கழிவறையைச் சுத்தம் செய்தது உண்மை எனத் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிச் சந்திரா உத்தரவின்படி, மாவட்ட கல்வி அலுவலா் தென்றல், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணியை 3 மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com