புகையிலை பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா, தலைமையில் காரிமங்கலம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், சிறப்பு நிலைக் காவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினா், காரிமங்கலம் பேருந்து நிலையம், கும்பாரள்ளி, புறவழிச்சாலை, அகரம் சாலை, மொரப்பூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பெட்டிக் கடைகள், தேநீரகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின் போது அகரம் பிரிவு சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சிறு பொட்டலங்களாகக் கட்டி மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் உடனடி அபராதம் விதித்து கடையை 30 தினங்கள் திறக்கக் கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா். இதையடுத்து அந்தக் கடை மூடப்பட்டது.
அதேபோல மொரப்பூா் சாலையில் கரகப்பட்டியில் அடுத்தடுத்த இரண்டு மளிகைக் கடை விற்பனையாளா்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைகள் 15 நாள்கள் இயங்க தடையும், தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பேருந்து நிலையத்தில் 2 கடைகள், மொரப்பூா் சாலையில் மளிகைக் கடை என மூன்று கடைகளில் காலாவதியான குளிா்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 2000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.