சேலம், டிச. 10: நாட்டில் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்றால் போலி என்கவுன்டர்களை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் தினத்தையொட்டி காவல் துறையில் நடைபெறும் மனித உரிமை மீறல் முறைகேடுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து இந்த அமைப்பு சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் பூமொழி பேசியது:
தமிழகத்தில் போலீஸ் துறையில் மனித உரிமை மீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்கவுன்டர் என்ற பெயரில் போலி மோதல் படுகொலைகள், பொய் வழக்குகள், விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்தல், சாராய வேட்டை என்ற பெயரில் மலை வாழ் மக்களை கொடுமைப்படுத்துவது, அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்கள், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, மனித உரிமைகளை மீறி செயல்படும் போலீஸôர் மீது பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 6 பேர் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா இறந்த வழக்கில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உண்மை நிலவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார் அவர்.
மக்கள் உரிமைகள் இயக்க மாநில பொதுச் செயலர் மதியழகன், சட்டப் பணிக்குழு பொதுச் செயலர் வழக்கறிஞர் ரகோத்தமன், அமைப்பின் கெüரவத் தலைவர் சையத் அப்பாஸ், துணைத் தலைவர் ஜெயராமன், மாநகரத் தலைவர் ராமு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.