சேலம், டிச. 10: மனித உரிமைக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும் என கம்யூனிட்டி சர்வீசஸ் டிரஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவச் சங்கம், கம்யூனிட்டி சர்வீசஸ் டிரஸ்ட் இணைந்து சேலத்தில் வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் தினவிழாவை நடத்தியது.
இதையொட்டி அழகாபுரம் போலீஸ் நிலையம் எதிரில் இருந்து மருத்துவச் சங்கக் கட்டடம் வரை பேரணி நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழக அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010-ல் பஞ்சாயத்து, உள்ளூர் அமைப்புகளுக்கு பள்ளி மேலாண்மை குழுவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் உடனே பள்ளி மேலாண்மை குழு அமைக்க வேண்டும். மனித உரிமைக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும்.
ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மலைதள பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிர் திட்ட அலுவலர் வி.ஐயப்பன் தலைமை தாங்கினார்.
கம்யூனிட்டி சர்வீசஸ் டிரஸ்ட் இயக்குநர் ஜி.ஜார்ஜ், நுகர்வோர் நல கவுன்சிலர் தலைவர் ஏ.அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.