ராசிபுரம், டிச.11: ரூ. 18 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள ராசிபுரம் பைபாஸ் சாலைத் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் கூறினார்.
ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழாவில் பங்கேற்று அவர் பேசியது:
நாமக்கல் மாவட்ட கிராமப்புறங்களில் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் பணி முடிவைடைந்துள்ளது. நகராட்சிப் பகுதிகளில் இம்மாதத்திற்குள் இப்பணி முடிவடையும்.
ராசிபுரம் நகரில் 9 வார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 5510 டிவிக்களின் மதிப்பு ரூ. 1.13 கோடி. இதற்காக அரசு சுமார் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ராசிபுரம் நகரில் ரூ. 18 கோடி மதிப்பிலான பைபாஸ் சாலை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். பஸ் நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ. 65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனி குடிநீர்க் குழாய் அமைக்க ரூ. 8.35 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு நகரில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது. சாலை பராமரிப்பு பணிகளுக்கு ரூ. 2.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.
முன்னதாக 5510 பயனாளிகளுக்கு அவர் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார்.
விழாவில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், கே.பி. ராமசாமி எம்எல்ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.